உதயத்தூர் முத்தாரம்மன் கோவிலில் வரலாறு

  

தலித் மக்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை 

உதயத்தூர் ஶ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழா


உதயத்தூர் உராட்சியில் சித்திரை மாதம் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா வந்து விட்டாலே போதும் ஒரே கொண்டாட்டம் தான்

 உதயத்தூர் முத்தாரம்மன் கொடைவிழா முடியும் வரை இங்கு எந்த ஊர் கோவிலுக்கும் கொடைவிழா கிடையாது.


 உதயத்தூர் அம்மன் கோவில் கொடைவிழா முடிஞ்சி அடுத்த செவ்வாய் வேணும்னா வச்சிருலாம் என்பார்கள் ஊர் பெரியவர்கள் 

அந்த கோவில் மீது அவ்வளவு பக்தி ஊர் பெரியவர்களுக்கு.


 ஊரே கோலாகலமாக இருக்கும் சென்னை, கோவை மதுரை, மும்பை எங்கு வேலை பார்த்தாலும் சரி இந்த திருவிழாவுக்கு கண்டிப்பாக ஊருக்கு வந்திருவோம்.


வறுமை வாட்டினாலும் வட்டிக்கு காசு வாங்கியாவது புது துணி வாங்கி கொடுப்பாங்க வீட்டுல 

அதை வாங்கி போட்டுகொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே செல்வோம்.


கோவிலுக்கு போகும் போது அவ்வளவு சந்தோசமா இருக்கும் மனசுல.


அப்பா கூறுவார் அந்த கோவிலுக்கு நாம வெறகு வெட்டி குடுத்தாதான் சமயலே ஆகும்ல என்று பெருமையாக.


ஊருல உள்ள எல்லோரும் ஆளுக்கு ஒரு கட்டு விறகு வெட்டி ஊர்ல முக்குசந்தியில எல்லோரும் வச்சிட்டு நிப்போம் ஊர்ல உள்ள எல்லோரும் வந்ததும் ஆளுக்கு ஒரு கட்டு விறக தலையில சுமந்துகிட்டு அனைவரும் கோவில நோக்கி நடப்போம்.


இதுவே தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டு இருந்தது.


கோவிலுக்கு சென்று நிகழ்ச்சி பார்ப்பதும் அங்கு உள்ள கடைகளில பொருட்கள் வாங்குவதும் இப்படியே ஒவ்வொரு திருவிழாக்களும் கழிந்தன.


நாங்கள் சிறுவயதில் புதுத்துணி அணிந்து கொண்டு கோவிலுக்கு செல்லும்போது எங்களைப் பார்த்து சில நபர்கள் உங்களைத்தான் கோவில் உள்ளேயே விடுவதில்லையே உங்களுக்கு எதற்கு புதுத்துணி என்று கேட்டதுண்டு 


சுய சிந்தனை வர ஆரம்பித்தது திருவிழாவுக்கு வருகிறோம் கடைகளில் பொருட்கள் வாங்கிகிறோம் நிகழ்ச்சி பார்க்கிறோம் வீட்டுக்கு கிளம்பி செல்கிறோம் நாம் வருகிறதே கோவிலுக்கு தான் ஆனால் கோவிலுக்கு உள்ளே செல்லவில்லையே என்று மனதுக்கு ஒரு நாள் தோன்றியது.


அதற்குப் பிறகு நம்மை உள்ளே செல்ல அனுமதிக்காத கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.


ஊர் பெரியவர்களிடம் #கேள்வி கேட்டோம் நம்மை உள்ளே செல்ல அனுமதிக்காத கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் என்று.


அதன்பிறகு கொஞ்சம் மக்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்தினர்.


ஊர் பெரியவர்கள் பேச்சில் ஒன்று மட்டும் புரிந்தது  அவர்கள் நம்மை  அடிமையாக  வைத்திருப்பது கூட   தெரியாமலயே நாம் அடிமையாக இருப்பதுதான்.


கோவிலுக்கு சென்றால் கோவில் கேட்டுகள் பூட்டப்பட்டு அங்கே வாசலிலேயே ஒருவர் உண்டியலுடன் நிப்பார் நாம் உண்டியலில் பணத்தை போட்டதும் திருநீர் தருவார் 

அப்போது நான் யோசித்தேன்  தலித் மக்கள் கோவில் உள்ளே செல்ல அனுமதி இல்லை ஆனால்  அவர்கள் தரும் காணிக்கை கடவுளுக்கு அபிசேகம் செய்ய தலித் மக்கள் கொடுக்கும் பணத்தில் தீட்டு இல்லை போல.


கோவிலுக்கு மேளம் அடிப்பவர்களை கூட தலித் என்பதால் கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைத்தனர்.


இன்னும் பதிவு செய்து கொண்டே போகலாம்.


இத விட கேவலம் என்னவென்றால் தலித் மக்களை அனுமதிக்காத கோவிலில் திருவிழா முடிந்ததும் அங்கே மிச்சம் மீதி இருக்குற சோறு, பழம் ,தேங்காய் எல்லாவற்றையும் ஊருக்கு கொடுத்து விடுவதுதான் அதை இங்கே வரிபழம் போல பங்கு வைப்பதுதான் கொடுமை.


காலங்கள் மாற மாற சுயஅறிவு கொண்டு சிந்தித்து கொண்டவர்கள் கொடைவிழா நேரத்தில் புது துணி எடுப்பதையும் #விறகு வெட்டி கொண்டு செல்வதையும் திருவிழா நேரங்களில் ஊருக்கு வருவதையும் நிறுத்தி கொண்டோம்.


இதையெல்லாம் பார்த்து கொண்டு அமைதியாக இருக்க அந்த அம்மனுக்கு சக்தி இருக்கோ இல்லையோ எங்களுக்கு சக்தி இல்லை.


இதை விட இன்னும் மூட நம்பிக்கை என்ற பெயரில் நடந்த கொடுமைகளை  பதிவு செய்யலாம் என்று இருந்தேன் மனம் ஏனோ எழுத மறுக்கிறது.


தீண்டாமை ஒரு பாவ செயல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம்

தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல் 

என படித்தால் மட்டும் போதாது. புத்தங்களில் பதிபவை சிலரின் மனங்களில் பதிய மறுக்கின்றன.

இவர்களும் மனிதர்கள் தான். வேற்று கிரஹ வாசிகள் அல்ல.

தொடரும்....


ஒரு நாள் மாறும் மாற்றுவோம்


பதிவு.

உதயம் சுரேஷ்

Post a Comment

Previous Post Next Post