கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

 நோக்கம்

கிராம வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கீழ்க்கண்ட முக்கிய காரணங்களின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. அவை
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் என்பது இலக்கு மக்களுக்கு உதவி செய்யும் ஒரு சுயசார்பு மக்கள் அமைப்பாகும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் பெரும்பான்மையோர் இலக்கு மக்களாக இருக்க வேண்டும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், புதுவாழ்வு திட்டத்தை செயல்படுத்துவதில் கிராம சபைக்கும், ஊர்க்கூட்டத்திற்கும் பொறுப்புடையதாக இருக்கும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் திட்டத்திற்கும், கிராம மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்கும்
ஏழைகளுக்காக ஏழைகளைக் கொண்டு அமைக்கப்படும் ஒரு சமூக அமைப்பு
பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு அமைப்புகள் இதுவரை உருவானாலும், வறுமையை மையமாக வைத்து, ஏழை மக்களின் அமைப்புகள் கிராம அளவில் சரிவர செயல்படுவதில்லை. வறுமையை ஒழிப்பதற்காக, மக்களால் உருவாக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுவதற்கான, ஏழை, எளியோருக்கான அமைப்புதான் இந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம்.
ஏழைகளின் பிரச்சனைகளை எளிதில் புரிந்து கொள்ளும் அமைப்பு
பெரும்பாலான கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் ஏழைகளாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதால், அவர்களுக்கு மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை நல்ல முறையில் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், மக்களின் வாழ்வு உயர, அவர்களே திட்டம் தீட்டி முடிவெடுப்பதால், அது ஏழை மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகவும் அமைகிறது.
சுய உதவி மற்றும் சுயசார்புத் தன்மை
கிராம வறுமை ஒழிப்பு சங்கம், தங்களுடைய சொந்த நிறுவனம் என்பதால் அச்சங்கம் தற்சார்பு உடையதாக இயங்கும். ஊரிலுள்ள அனைத்து நபர்களையும் கலந்தாலோசித்து, நமக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும் நமக்குள்ளேயே பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
தலைமைப்பண்பை ஏழைகளிடையே உருவாக்குதல்
மிகவும் ஏழைகள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்கள், பயனாளிகளாக மட்டுமே இருந்து வருகின்றனர். தலைமை மற்றும் ஆளுமைப் பண்புகளை வளர்க்க அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏழைகளுக்கு போதிய வாய்ப்புகளை அளிப்பதில்லை. மாறாக நம் திட்டத்தில், இலக்கு மக்களே முக்கிய பொறுப்புகளை வகிப்பதனால் அவர்களது பல்வேறு திறமைகள் வளர்க்கப்பட்டு, மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக உருவாக்கப்படுகிறார்கள்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஏன்?
வறுமையை ஒழித்து, வளமையான கிராமத்தை உருவாக்க வேண்டும் என்கிற இலட்சியப் பார்வையுடன், பெரும்பாலான கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் செயல்படுவதினால், இந்த அமைப்புக்கள் போதிய திறமைகள் மற்றும் வளங்களைப் பெற்று நிலைத்து செயல்படும். மேலும் இது, மக்கள் பங்கேற்புடன் செயல்படும் ஒரு மக்கள் அமைப்பு என்பதால், திட்டக்காலத்திற்கு பின்பும் தன் இலட்சியத்திற்காக தொடர்ந்து செயல்படும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பொறுப்புகள்
  • புதுவாழ்வு திட்டத்தில் மிகவும் ஏழை, ஏழை, மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், மற்றும் நலிவுற்றோர் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இதுவரையில் சுய உதவிக் குழுக்களில் இல்லாத இலக்கு மக்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் குழுவாக இணைத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து முன்னேற்ற வேண்டும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், புதுவாழ்வு நிதிக்காக தனி வங்கி கணக்கை ஆரம்பித்து செயல்படுத்த வேண்டும்.
  • கிராம முன்னேற்றத்திற்கான திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும்.
  • இத்திட்டத்தின் மூலம் இலக்கு மக்களின் வருமானத்தை மேம்படுத்த வேண்டிய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் .
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சமூகத்தணிக்கைக்குழு, சுயஉதவிக்குழுக்கள் போன்ற மக்கள் அமைப்புகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் தன் ஆதரவினை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
  • சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடத்தில் நிதி ஆதாரம் திரட்டுவதற்கு துணை புரிய வேண்டும்.
  • திட்ட ஒருங்கிணைப்பு அணியுடன் இணைந்து, சார்புத்தொழில் வல்லுநர்களைக் கண்டறிந்து உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தங்களுடைய செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது உரிய அறிக்கைகளை அளிக்க வேண்டும்.
  • கிராம சபைக்கு தனது செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிக்கையாக தெரிவிக்க வேண்டும்.

  • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை

நமது கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் குறைந்தது 10 முதல் அதிகபட்சமாக 20 நபர்கள் வரை உறுப்பினர்களாக இருக்கலாம்.
கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது, இலக்கு மக்களிலிருந்து 80ரூ உறுப்பினர்கள் தேர்வு செய்வதை உறுதி செய்ய வேண்டும். பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும்.
குறைந்த பட்சம் 30ரூ விழுக்காடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
குறைந்தது 50ரூ விழுக்காடு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.
ஊராட்சியில் குடியிருப்புகள் பெரிதாக அல்லது அதிகமாக இருந்தால், கிராமசபை ஊராட்சிக்கு ஏற்றாற்போல சுழற்சி முறையை பயன்படுத்த வேண்டும். எப்படி இருந்தாலும், வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் 20 பேருக்கு மேற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
1. குடியிருப்பு பிரதிநிதிகள் தேர்வு செய்யும் முறை (3 முதல் 14 நபர்கள்)
ஒரு ஊராட்சியில் பல குடியிருப்புகள் இருப்பதால், அந்தந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்கு பொறுப்பேற்று செயல்பட இலக்கு மக்களிலிருந்து ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு பிரதிநிதியாக மக்கள் தேர்வு செய்யலாம்.
இவர்களை குடியிருப்பு கூட்டம் நடத்தி அவர்களின் பணி மற்றும் பொறுப்புகளை எடுத்துக்கூறி மக்களின் பெரும்பான்மை விருப்பத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.
குடியிருப்பு பிரதிநிதிகள், இலக்கு மக்கள் பட்டியலில் உள்ளவர்களாகவும், மகளிர் சுய உதவி குழு உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.
இவர்களில் 50 சதவிகிதத்தினர் மிகவும் ஏழையாக இருத்தல் வேண்டும்.
சுய உதவிக் குழுக்கள் இல்லாத குடியிருப்புகளில் இலக்கு மக்களைக் கொண்ட சுய உதவிக் குழுக்களை ஆரம்பிக்க வேண்டும். அம்மாதிரியான குடியிருப்புகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உறுப்பினர்கள் தேர்வு செய்வதை தள்ளி வைக்கலாம்.
குறைந்த பட்சம் குழு ஆரம்பித்து இரண்டு மாதம் செயல்படுத்திய பின்னர் குடியிருப்பு பிரதிநிதியை தேர்வு செய்து, பின்னர் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உருவாக்கப்பட வேண்டும்.
குடியிருப்புப் பிரததிநிதிகளை தேர்வு செய்த பின்னர், அவர்களின் பெயர்களை முன்மொழிந்து கிராம சபையின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
குடியிருப்பு பிரதிநிதிகளின் பொறுப்புகள்
  • தங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள, இலக்கு மக்கள் அனைவரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • குடியிருப்பிலுள்ள இலக்கு மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கியமான முடிவுகளையும், தங்கள் குடியிருப்பிலுள்ள இலக்கு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
2. ஊராட்சித் தலைவர் (ஒருவர்)
ஊராட்சி மன்றத் தலைவர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் தலைவராக இருப்பார்.
பொறுப்புகள்
  • தலைவர் தலைமை ஏற்று கூட்ட நிகழ்ச்சி நிரலின்படி விவாதம் செய்வார்.
  • அனைத்து உறுப்பினர்களும் விவாதத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்வார்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் திட்டத்தின் புதுவாழ்வு திட்ட உயிர்மூச்சு கோட்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வார்.
  • பிறத் திட்டங்கள் மூலம் உதவிகளை பெற்றுத் தர உதவிச் செய்வார்.
3. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு
கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு குடியிருப்புப் பிரதிநிதிகளிலிருந்து செயலாளர் மற்றும் பொருளாளரை கிராம வறுமை ஒழிப்பு சங்கக் கூட்டத்தில் தேர்வு செய்து கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும். கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் வங்கிக் கணக்குகளை செயலாளர் மற்றும் பொருளாளர் கூட்டாக இணைந்து செயல்படுத்துவார்கள்.
செயலாளரின் பொறுப்புகள்
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு வேண்டிய முயற்சிகளை எடுப்பார்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டத்திற்கான, நிகழ்ச்சி நிரல்களை தயார் செய்வார்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மான நோட்டில் எழுதுவார்.
  • பொருளாளருடன் இணைந்து அனைத்து அலுவலக ஆவணங்களை பராமரித்தல், வங்கி வரவு, செலவு கணக்கு பராமரித்தல் மற்றும் காசோலைகளில் கையொப்பம் இடுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்வார்.
பொருளாளரின் பொறுப்புகள்
  • வங்கி அலுவல்களை செயலாளருடன் இணைந்து கவனித்து காசோலைகளில் கையொப்பம் இடுவார்.
  • கணக்குகள் தொடர்பான அனைத்து பதிவேடுகள், வங்கிப் புத்தகம், காசோலைப் புத்தகம் ஆகியவற்றை பராமரித்து இவர் பொறுப்பில் வைத்து இருப்பார்.
  • கணக்கு தொடர்பான அனைத்து பதிவேடுகளையும் இவர் பொறுப்பில் வைத்து இருப்பார்.
  • தீர்மானத்தின்படி தொகை வழங்குவதும் மற்றும் அதற்கான ரசீது, வவுச்சர் பராமரிப்பதும் இவரது பொறுப்பாகும்.
  • கணக்காளரின் செயல்பாடுகளை இவர் கண்காணிப்பார்.
4. மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு உறுப்பினர் - ஒருவர்
மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் உறுப்பினராக இருப்பார்.
பொறுப்புகள்
  • விடுபட்ட இலக்கு மக்களை குழுக்களாக அமைக்க கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு இவர் உதவுவார்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் விவாதிக்கப்படும் விவரங்களை மகளிர் கூட்டமைப்பு கூட்டத்தின் போதும் சுய உதவிக் குழு கூட்டத்திலும் தெரிவிப்பார்.
  • விடுபட்ட குழுக்களை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைத்து கூட்டமைப்பின் செயல்பாடுகளில் பங்கெடுக்க உதவிபுரிவார்.
5. இளைஞர் துணைகுழுவில் இருந்து உறுப்பினர்கள் (இருவர்)
இளைஞர் துணைகுழுவின், இலக்கு மக்கள் குடும்பங்களை சார்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இளைஞர் பிரதிநிதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
பொறுப்புகள்
  • இளைஞர் அமைப்புகள் முறையாக கூட்டம் போடுதலை கண்காணித்தல்.
  • இளைஞர் மேம்பாட்டிற்காக தீட்டிய திட்டத்தினை செயல்படுத்த கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு உதவியாக இருப்பார்கள்.
  • இளைஞர்கள் தொழில் மற்றும் திறன் வளர்ப்பு போன்ற விசயங்களை கண்காணித்து அறிக்கை கி.வ.ஒ.சங்கத்திற்கு அளிப்பார்கள்.
இளைஞர் மேம்பாட்டிற்கான உத்திகள்
1. கிராமத்திலுள்ள 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இளைஞர் ஆவர்.
2. திட்ட செயலாக்கத்திற்கு இளைஞர்கள் முழுமையாக பங்கேற்று திட்ட பயன்களை பெறுவதற்கு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

Post a Comment

Previous Post Next Post